முன்குறிப்பு: கட்டுரை எழுதப்பட்ட தேதி: ஆகத்து 2, 2013.
ஒரு வழியாக பல ஆண்டுகளாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தெலங்கானா தனிமாநில கோரிக்கைக்கு பல்வேறு சிக்கல்களுகிடையில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. சீமாந்திரா மக்களை சமாளிக்கும் வகையில் ஹைதராபாத் நகரம் அடுத்த பத்தாண்டுகளுக்கு இருமாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக நீடிக்கும் என அறிவித்துள்ளனர். ஆனால் அப்பகுதி மக்களும், அரசியல்வாதிகளும் கடந்த இருநாட்களாக ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கும் காங்கிரஸ் அரசின் முடிவுக்கெதிரான தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பலர் தங்கள் பதவியைத் துறந்தும், காங்கிரஸிலிருந்து விலகும் முடிவிலும் இறங்கியுள்ளனர். மறுபக்கம் தெலங்கானா பகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
“சரி... எல்லாரும் தெலுங்கு பேசும் மக்கள்தானே? அவர்களில் ஒரு சாரார் ஏன் தனி மாநிலம் கேட்கிறார்கள்? நம்மூரில் மருத்துவர் இராமதாஸ் வட தமிழ்நாட்டை வன்னிய தமிழ்நாடென்று பிரிக்க வேண்டுமென்று காமெடி செய்வதுபோல அங்கும் யாராவது அட்ராசிட்டி செய்கிறார்களா?” என்று கேட்டால்... இல்லை.இது பல உயிர்களைக் குடித்த வரலாற்றைக் கொண்ட தீவிரமான ஒரு போராட்டம்.
இதைப் புரிந்துகொள்ள சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியமாகிறது. தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலம் தெலங்கானா, ராயலசீமா, கடலோர ஆந்திரா என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. இதில் பிரச்சனைக்குரிய தெலங்கானா மண்டலம் பல மன்னர்களின் ஆளுகையிலிருந்த பிறகு ஆங்கிலேயர் காலத்தில் நிசாம்களால் தனி சமஸ்தானமாக ஆளப்பட்டது. பிரித்தானியர்களுக்குப் பல வகையில் நிசாம்கள் உதவியதால், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்து இரண்டும் விடுதலையடைந்த பின்னும் ஹைதராபாத் தனி சமஸ்தானமாக தொடர வாய்ப்பளித்துச் சென்றனர். விரும்பினால் இரண்டில் ஒரு நாட்டுடன் இணைந்துவிடவும் வாய்ப்பிருந்தது. ஆனால் அவ்வாறு செய்யாமல் தனி சமஸ்தானமாகவே நிசாம்கள் தொடர விரும்பினர். ஆனால் இவர்கள் ஆட்சியில் தெலங்கானா பகுதியில் வாழ்ந்த தெலுங்கு, கன்னடம், மராத்தி மக்களுக்குத் தத்தமது தாய்மொழியில் கற்க வழியில்லையாம். அனைத்திலும் உருது மொழியே ஆதிக்கம் செலுத்தியது. இதனால் மற்ற மாநிலங்கள் கல்வியறிவைப் பெற்று வளர்ந்த காலத்திலும் இப்பகுதியில் பெருவாரியான மக்கள் எழுத்தறிவில்லாமலும், நிலச்சுவான்தார் முதலைகளிடம் கூலியாகவும் காலத்தைக் கழிக்க நேரிட்டது.
இதனால் மனமுடைந்துக் கொந்தளித்த உழவர்கள் 1946 முதல் அளவில்லாமல் நிலங்களை வைத்து மக்களை ஏய்த்துப் பிழைத்தோரை எதிர்த்து பெரும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்டுகள் இப்போராட்டத்தில் பெரும்பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. ஒருவழியாக பல உயிர்களைக் காவு வாங்கிய பின் 1951இல் இப்போராட்டம் பலவந்தமாக அடக்கப்பட்டது. இதற்கிடையில் 1948ம் ஆண்டு இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் “ஆபரேசன் போலோ (Operation Polo)" <அந்நாளில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஹைதரபாத்தில் 17 போலோ விளையாடும் மைதானங்கள் இருந்ததே அது இப்பெயர் பெறக்காரணம்> மூலமாக பெரும் தாக்குதலுக்குப் பின் நிசாம்களிடமிருந்து மீட்டு ஹைதராபாத்தினை இந்தியக் குடியரசோடு இணைத்தார். நிற்க! இதுவரைக்கும் கூட ஹைதரபாத்தும் (தெலங்கானா பகுதி), சீமாந்திராவும் ஒரு மாநிலமாக இல்லை என்பதைக் கவனித்தீர்களா?? பிறகெப்படி?
1952ம் ஆண்டு தெலங்கானா (ஹைதராபாத் சமஸ்தானம்) பகுதிக்குத் தேர்தல் நடைபெற்று இராமகிருஷ்ணராவ் என்பவர் முதல்வரும் ஆனார். இந்தக் காலகட்டங்களில் சீமாந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் அனைத்தும் மதராஸ் மாகாணமாக ஒன்றிணைந்தே இருந்தன. அப்போதுதான் 1952ம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு பேசும் மக்களை மதராஸ் மாகாணத்திலிருந்து விடுவித்து ஆந்திர மாநிலம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவங்கினார். ஏறக்குறைய இரண்டு மாதங்கள் கழித்து அவர் டிசம்பர் மாதம் 15 நாள் இறந்துவிட ஆந்திரா எங்கும் கலவரம் மூண்டது. இதன் பின்னர் வேறுவழியின்றி 1953ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து ஆந்திரா என்னும் மாநிலம் கர்னூலைத் தலைநகராகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவில் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் என்ற அந்தஸ்தையும் பெற்றது. இது நடந்தபோதும் ஹைதராபாத் உள்ள தெலங்கானா மண்டலம் ஆந்திர மாநிலப் பகுதியாக இல்லை.
இதன் பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி ஃபசல் அலி, மாதவ பணிக்கர், குன்சுரு உள்ளிட்டோர் அடங்கிய மாநில மறுசீரமைப்புக் குழுவினை நேரு நியமித்தார். இவர்கள் தங்கள் அறிக்கையில் தெளிவாக தெலங்கானா/ஒன்றிணைந்த ஆந்திரா வின் சாதக/பாதகங்களை நடுநிலையோடு பட்டியலிட்டனர்.கல்வியில் பெரிதும் பின்தங்கியிருக்கும் தெலங்கானாவை ஏனைய ஆந்திரத்தோடு இணைத்தால் அம்மக்கள் வேலைவாய்ப்பில் கடுமையாகப் புறக்கணிக்கப்படுவர் என்றும் அறிவுறுத்தினர். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் அவ்வறிக்கையின் 386ம் பத்தியில் ஆணித்தரமான ஒரு இறுதி அறிவுரையை அரசுக்குத் தெரிவித்துள்ளனர். அது என்னவென்றால், ”எல்லா அம்சங்களையும் ஆராய்ந்த பின்னர் நாங்கள் தெலங்கானா, ஆந்திரா இருமாநிலங்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறோம். அதாவது 1961ம் ஆண்டு ஹைதராபாத் மாகாணத் (தெலங்கானா) தேர்தல் நடைபெறும் வரை காத்திருப்போம். அதன்பின் புதிய சட்டப்பேரவை கூடியபின் அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டும் தெலங்கானாவை சீமாந்திராவோடு இணைக்கலாம்” என்பதுதான். ஆனால் இது எதையும் நடுவணரசு காதில் போட்டுக் கொள்ளாமல் தெலங்கானா மக்கள், மாநில முதல்வர் உள்ளிட்டோரின் கடும் எதிர்ப்பை மீறி 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தெலங்கானாவையும், ராயலசீமா, கடலோர ஆந்திராவையும் இணைத்து தற்போதைய ஆந்திரப்பிரதேச மாநிலத்தை உருவாக்கியது.. அதிலுள்ள 23 மாவட்டங்களில்ஹைதராபாத், அடிலாபாத், மெகபூப் நகர், கம்மம், கரீம்நகர், மேடக், நலகொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி & வாராங்கல் அடங்கிய பத்தும் தெலங்கானாவிற்கு உரியவை. விசாகப்பட்டிணம், விஜயநகரம், குண்டூர், நெல்லூர் போன்றவை செழிப்புமிக்க கடலோர ஆந்திரப் பகுதிகள். திருப்பதி, கடப்பா, சித்தூர், கர்னூல் உள்ளிட்ட ஏனைய பகுதிகள் ராயலசீமா பகுதிக்குரியவை.. ஒன்றிணைந்த ஆந்திராவின் புதிய தலைநகராக தெலங்கானா இதயமான ஹைதராபாத் அறிவிக்கப்பட்டது. அத்தோடு கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் உருவாக்கப்பட்டன. தெலங்கானா பகுதியில் பெருவாரியான அளவில் கன்னடர்கள் வாழ்ந்த பகுதிகள் மற்றும் மராத்தியர்கள் வாழ்ந்த பகுதிகள் முறையே புதிதாக மதராஸ் மாகாணத்திலிருந்து பிரிந்த கர்நாடகவோடும், மகாராஷ்டிரத்தோடும் இணைக்கப்பட்டன. இவ்வாறு மொழிவாரி ராஜ்ஜியங்கள் அமைக்கப்பட்ட அச்சமயத்தில் இந்தியாவில் 16 மாநிலங்களும் 3 யூனியன் பிரதேசங்களும் இருந்தன என்பது குறிப்பில் கொள்ளத்தக்கது.
குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும் விதமாக, தெலங்கானா முதல்வர் இராமகிருஷ்ணாராவ் மற்றும் சீமாந்திரா முதல்வர் கோபால் ரெட்டி முதலிய மூத்த அரசியல்வாதிகள் இணைந்து The Gentlemen's Agreement என்ற உடன்படிக்கையினை 1956இல் கையெழுத்திட்டனர். அதில் பின்தங்கிய பகுதியான தெலங்கானாவில் இருந்து 40% அமைச்சர்கள் சட்டப்பேரவையில் இடம்பெற வேண்டும், முதல்வர் அல்லது துணை முதல்வர் - ஏதேனும் ஒரு பதவி அப்பகுதியைச் சேர்ந்தவருக்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வாறு போடப்பட்ட அந்த ஜெண்டில்மேன் ஒப்பந்தத்தின் எந்த முடிவையும் ஆந்திர அரசியல்வாதிகள் செயல்படுத்தாதது 1969இல் தெலங்கானா இயக்கத்துக்கு வழிகோலியது. சென்னா ரெட்டி, நரசிம்ம ராவ்போன்றோர் முதலில் தெலங்கானாவை முன்னிறுத்திப் பின் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துவிட்டு அதற்குப் பரிசாக பதவிகளைப் பெற்றார்கள்.
1983ம் ஆண்டு தேர்தலில் புதிதாக கட்சி ஆரம்பித்த நடிகர் என்.டி.ஆர் ஆட்சியைப் பிடித்தார், அவர் ஏதேனும் உருப்படியாய் செய்யும் முன்னமே அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு ஆட்சியைக் கைப்பற்றினார். 1995 முதல் 2004 வரை ஆந்திர முதல்வராக இருந்த இவர் தனித் தெலங்கானாவிற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துப் பின் சில அரசியல் காரணங்களால் 2008இல் ஆதரிப்பதாகக் கூறினார். 2000ம் ஆண்டு வாக்கில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த கே.சந்திரசேகர ராவ் என்பவர் அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் ’தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி’ என்ற புதுக்கட்சியைத் தொடங்கி தனித் தெலங்கானா போராட்டங்களைத் தீவிரமாக நடத்திச் சென்றார். 2004ம் ஆண்டு காங்கிரஸ் தந்த தனித் தெலங்கானா வாக்குறுதியை நம்பி அவர்களுடன் தேர்தலில் கூட்டணி அமைத்தார். ஆனால் அதன்பின் ராஜசேகர ரெட்டி அதைத் தட்டிக் கழித்ததால் 2009ம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவோடு இணைந்து தேர்தலைச் சந்தித்தார். ஆனால் இம்முறையும் காங்கிரசே வென்று மீண்டும் ராஜசேகர ரெட்டி முதல்வரானார். சில மாதங்களில் வானூர்தி விபத்தில் இறந்து அதன் பின் ரோசைய்யா, கிரண்குமார் ரெட்டி என்று ஆற்றலில்லா நபர்கள் முதல்வராய் நியமிக்கப்பட்டார்கள்.
2009 முதல் தெலங்கானா பிரச்சனை மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் பலர் தீக்குளித்தனர். தெற்கே ஈழப்பிரச்சனையில் யாழ் இந்துப் பல்கலைக்கழகம் போலவே தெலங்கானா போராட்டத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் பங்கு அளப்பரியது. சந்திரசேகர ராவ் காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவிக்க பிரச்சனை இன்னும் தீவிரமாகி தெலங்கானா பகுதிகளில் பந்த் வரை சென்றது. மத்திய அரசு அவரைச் சமாதானம் செய்து ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டியை அமைத்தது. அவர்களும் எப்போதோ அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்ட நிலையில் அண்மையில் தீவிரமாக நடைபெற்று வரும் போராட்டங்களால் விழித்த நடுவணரசு ஒருவழியாக தனிமாநில அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆனால் தெலங்கானாவைப் பிரிப்பதற்கு சீமாந்திராவில் கடும் எதிர்ப்பு உள்ளது. தற்போதைய முதல்வர் கிரண்குமார் ரெட்டியே ஆந்திராவை இரண்டாகப்பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அப்படியே பிரித்தாலும் ஹைதராபாத் யாருக்கு என்பதில்தான் பெரும் தலைவலியே. ஹைதராபாத் இல்லாமல் ஒரு காலத்திலும் தெலங்கானாவை அம்மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆகவே அதைச் சண்டிகரைப் போல் இரு மாநிலங்களுக்கும் பொதுவான யூனியன் பிரதேச தலைநகரமாக ஆக்கிவிடலாமா என்ற திட்டமும் அரசிடம் உள்ளது. ஆந்திர பெருமுதலாளிகளாலும், ரெட்டிக்களாலும் கடுமையாக பின்னடைவைச் சந்தித்து தங்கள் நிலங்களை இழந்து வறட்சித் தீயோடு புரட்சித் தீயில் கனன்று கொண்டிருக்கும் தெலங்கானா மக்கள் விடிவை நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். தங்களின் வட்டார மொழிவழக்கைக் கூட கிண்டல், கேலி செய்யும் சீமாந்திரத்தோடு சேர்ந்திருக்க அவர்கள் விரும்பவில்லை. தனித் தெலங்கானா தவிர எதுவும் எந்நாளும் அவர்களைத் திருப்தி படுத்தாது என்பது திண்ணம்! அதை உணர்ந்தேதான் காங்கிரசும் வேறு வழியின்றி அவர்களுக்கு சாதகமான முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிறந்த வெற்றியினைப் பறிக்கலாம் என்பது அவர்கள் திட்டம். இல்லாவிட்டால் “நாங்கள் மத்தியில் ஆட்சி அமைத்த மறுகணமே தெலங்கானா அறிவிப்பு வெளியிடுவோம்” என்று கூறிவரும் பாஜக அப்பகுதி ஓட்டுகளைப் பெற்றுவிடுமோ என்ற அசமும் அவர்கள் இம்முடிவினை எடுக்க வழிகோலியிருக்கலாம்.
இதைத் தொடர்ந்து அசாமில் கார்பி அங்லாங் தனிமாநிலம் கேட்டும், உத்தரபிரதேசத்தை நான்காகப் பிரிக்க வலியுறுத்தி மாயாவதியும், கர்நாடகாவைப் பிரித்து துளு நாடு கேட்டும், மகாராஷ்டிரத்திலில்ருந்து விதர்பாவைப் பிரிக்கக் கோரியும், மேற்கு வங்கத்திலிருந்து கூர்க்காலாந்து தனிமாநிலம் அமைக்கவும் கேட்டுப் பல போராட்டங்கள் ஆயத்தமாகி வருகின்றன. சிறிய மாநிலங்கள் அமைப்பது வளர்ச்சியை அதிகரிக்குமா அல்லது நாடு துண்டாடப்படுவதற்கு வாய்ப்பாகிவிடுமா என்று விவாதங்களும் ஆரம்பமாகிவிட்டன.