Indi blogger Badge

Wednesday, December 19, 2012

வெளிப்பட்ட தீவிரவாதத்தின் கோ(ர)ழை முகம்



பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கிலுள்ள மிங்கோரா நகரின் பள்ளியிருந்து மாணவிகள் வீட்டுக்குத் திரும்ப பேருந்தில் காத்திருக்கொண்டிருக்கையில், தாடி வைத்த ஒரு ஆசாமி வந்துஉங்களில் யார் மலாலாஎன்கிறான்? மலாலாவைப் பெண்கள் காட்ட அதை நம்பாமல் மலாலாவோடு சேர்த்து உடனிருந்த மற்ற இரு மாணவிகளையும் சுட்டுவிட்டு தப்புகின்றான். நெற்றியிலும் கழுத்திலும் தோட்டாவைச் சுமக்கும் மலாலா உயிருடன் திரும்பவேண்டி இன்று ஒட்டுமொத்த பாகிஸ்தானும் கண்ணீருடன் வேண்டிக்கிடக்கிறது


பதினான்கே ஆண்டுகள் நிரம்பிய மலாலா யூசுப்சாய்என்னும் அச்சிறுமியைத் தீவிரவாதிகள் சுடக் காரணம் பெண்குழந்தைகள் கல்விக்காக அவள் போராடியதும், ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் வெறிச்செயல்களை எதிர்த்து அமைதியாய்ப் புரட்சி செய்ததும்தான்.
பாகிஸ்தானின் சுவிட்சர்லந்துஎன்ற பட்டப்பெயரை உடையது சுற்றுலாவிற்குப் பெயர்பெற்ற ஸ்வாட் பள்ளத்தாக்கு. ஆனால் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நாளிலிருந்து அமைதியைக் காண்பதே விந்தையாகிப் போனது. ஆண்கள் அனைவரும் மதவழக்கப்படி தாடி வளர்க்க வேண்டும், பெண்கள் யாரும் பள்ளிக்குச் செல்லக் கூடாது, மாலை நேரத்துக்கு மேல் வெளியில் நடமாடக் கூடாது, டிவி பார்க்க, இசை கேட்கக் கூடத் தடை. மீறி நடப்பவர்களின் தலை துண்டாக்கி உடல் வீதியில் வீசப்படும்.

2009ம் ஆண்டில் தலிபான்களின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது பிபிசி-இன் உருது பிரிவிற்காக ஸ்வாட் பள்ளத்தாக்கின் அவலங்களைத் தோலுரித்துப் புனைப்பெயரில் வலைப்பதிவு எழுதிய போது மலாலா யூசுப்சாயின் அகவை வெறும் பதினொன்று! 2011 இல் பாகிஸ்தான் அரசுப்படைகளால் ஸ்வாட் பள்ளத்தாக்கில் தலிபான்கள் ஆட்சி ஒழிக்கப்பட்ட பிறகு, மலாலா பெண்கல்வியின் இன்றியமையாமையை வலியுறுத்தி தீவிரமாகக் குரல் கொடுக்கத் தொடங்கினாள். மலாலாவின் அயராத உழைப்பைப் பல்வேறு பன்னாட்டு நிறுவங்கள் பாராட்டி விருது தந்தன. ”பன்னாட்டுக் குழந்தைகள் அமைதி விருதிற்குமலாலாவின் பரிந்துரை செய்யப்பட்டது. யுனிசெஃப் அமைப்பின் சார்பாக உரையாற்றவும் செய்தாள். மலாலாவின் தந்தை மகளிர்க்கான பள்ளியை நடத்தி வருபவர்.

பிற்போக்கில் ஊறிப்போன தலிபான்களுக்கு இதுவெல்லாம் எரிச்சலை உண்டாக்கியது. கடந்த ஓராண்டாக தக்க நேரத்திற்குக் காத்திருந்து இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். மலாலாவின் செயல்கள் மேற்கத்திய அசிங்கங்களைப் பரப்பும் முயற்சி என்றும், அவளைக் கண்டிப்பாகக் கொன்று முடிப்போம் என்றும் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள தெஹ்ரீக்--தலிபான் (T-e-T) அமைப்பு தெரிவித்துள்ளது.



ஓர் அப்பாவியை உயிரைக் கொல்ல எத்தனிப்பது ஒட்டுமொத்த மனித இனத்தையே கொல்ல முயல்வதற்கு ஒப்பானதென்றுதான் இஸ்லாம் கூறுகிறதுஎன்று கூறி பாகிஸ்தானில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சுன்னி முஸ்லிம் மதகுருக்கள் அத்தீவிரவாதிகளைக் கண்டித்துஃபத்வாஅளித்துள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் அனைத்து உலகத் தலைவர்களும் இக்கோழைத்தாக்குதலைக் கண்டித்த வண்ணம் உள்ளனர். தற்போது மலாலா மிங்கோராவில் இருந்து பெஷாவர் மருத்துவமனைக்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாள். தேவைப்பட்டால் வெளிநாட்டுக்கும் அழைத்துச் செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நாடெங்கும் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் நாளாக அனுசரிக்கப்பட்டது. குண்டு பாய்ந்த காயங்களோடு மலாலா ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப் படுவதை தொலைக்காட்சியில் பார்த்து பார்த்துக் கண்ணீர் வடிக்கும் அந்நாட்டு மக்களுக்கு, “உயிர் பிழைத்து வந்து மலாலா திரும்பவும் போராடுவாள்என்ற மருத்துவர்களின் நம்பிக்கை சொற்கள் மட்டுமே ஆறுதல்


தலிபான்கள் பலமுறை மிரட்டிய போதும் அஞ்சாமல் பாதுகாப்பைக் கூட வேண்டாமென்று மறுத்துப் போராடியவள் என் மகள். அவளுக்கு வளர்ந்த பின் அரசியலில் நுழைய வேண்டும் என்றுதான் ஆசைஎன்கிறார் மலாலாவின் தந்தை. நாளும் குண்டு வெடிக்கும் போர்க்கள பூமியில் இந்த புரட்சிப்பூ மாற்றம் கொணர்ந்து சாதிக்கும் என நாமும் நம்புவோம்.



இதே வேளையில் நமது ஹரியானா மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் பதினான்கு சிறுமிகள் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இது குறித்து காப் பஞ்சாயத்தினர் கூறியது என்ன தெரியுமா?? பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணத்தை முடித்துவிட்டால் இவ்வாறெல்லாம் நடக்காது. அரசாங்கம் பெண்களுக்கான திருமண வயதைத் தளர்த்த வேண்டும்!”
பாகிஸ்தானுக்கு மட்டுமன்று இந்தியாவிற்கும் இன்று தேவைப்படுகிறாள் ஓர் மலாலா!

குறிப்பு: எப்போதோ எழுதப்பட்ட இக்கட்டுரையைச் சில காரணங்களால் படு தாமதமாக இப்போதுதான் பதிவேற்ற முடிந்தது.